ஏப்ரல் 28, 2011

காதல் பற்றிய எண்ணத்தை மாற்றுங்கள்...

   காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டும் அல்ல.. அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தாங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.  கைகளை கோர்த்து நடப்பது காதல் அல்ல.. மனங்களை கோர்த்து இணைவது காதல். ஆஆஆ.... காட்டும் அம்புலி அல்ல காதல்... அள்ளி அணைக்கும் ஆறுதல் தான் காதல்.

        ஆனால் இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காணமுடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவாகவே கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. உயிராக உருவெடுத்தது உரம் இன்றி உதிர்ந்து போகிறது. ஒரு தலைக்காதலில் சரித்திரமாய் நினைத்தது வெறும் சித்திரமாய் கிடக்கிறது.
       அவ்வாறு அதிகரிக்கும் சரிவுகளுக்கு திரைப்படங்கள் தான் காரணம். காதல் கதைகள் எல்லாமே திருமணத்தின் முடிவுதான் என்ற நினைவை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. பார்த்துக் காதல் பார்க்காமல் காதல்.. உணர்ச்சிக் காதல்.. இரக்கக் காதல்.. என ஏகப்பட்ட காதல்களை எடுத்துக்காட்டிலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்துவிடுகிறது. அதன் பிறகு எல்லை இல்லாத ஒரு இன்பப் பயணம் தான் என்னும் கற்பனையை காண்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. ஆனால் திருமணம் காதலின் வெற்றி இல்லை. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி என்பது அந்த ஆரம்ப இனிமையை இறுதி வரை தக்கவைத்துக் கொள்வது தான். திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சுகமாக மனதில் தக்க வைத்துக்கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும்.. கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகவும் முடிந்து விடுகிறது.
      இதெல்லாம் ஏன் எப்படி என்று பார்த்தீர்களா?.. காரணம் கண்மூடித்தனம். காதலிக்கும் போது காதலியினதோ காதலனதோ குறையை நன்றாக அறிந்திருங்கள். மனிதப்பிறவி  என்றாலே குறை இருப்பது இயல்பு தானே..??
      இங்கு காதல் காலத்தை பார்த்தாலும் சரி திருமணமான பின்னரான காலத்தை பார்த்தாலும் சரி மகிழ்ச்சி என்பது நிலைத்திருக்கவில்லை. அதுதான் மனிதவாழ்வு.. நாமாக எதைப்பற்றியும் ஒரு எண்ணக்கருவை உருவாக்க முடியாது. அவ்வாறு தான் காதலும்.. தெளிவாக யோசித்து உறுதியான தீர்மானத்துடன் காதலியுங்கள். ஒரு விடையத்தை கவனித்துக் கொள்ளங்கள்.. உண்மையாக காதலியுங்கள் தோல்வியில் முடிந்தாலும்  மரணம் வரை ஒரு சுகம் இருக்கும்.

                              “ பறவாயில்லை காதலியுங்கள்.. கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியமாம்...”

T.Aynks.